About

இலுப்பையூர், மத்திய தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய சிற்றூராகும்.  திண்ணனூர் அஞ்சல் நிலையத்துக்கு உட்பட்ட, சாத்தனூர் பஞ்சாயத்தை சேர்ந்த இலுப்பையூரின் அஞ்சல் குறியிட்டு எண் (Pin Code) 621006 ஆகும். இலுப்பையூரிலுள்ள பெரும்பான்மை மக்களின் தொழில் வேளாண்மையாகும். மழலையர் கல்விக்கு அரசு அங்கன்வாடி மையமும், குழந்தைகளின் தொடக்க கல்விக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் இலுப்பையூரில் அமைந்துள்ளது. இலுப்பையூரைச் சேர்ந்த பலர் தங்களுடையத் தொழில் மற்றும் வேலையின் காரணமாக துறையூர், திருச்சி மற்றும் சென்னையில் வசிக்கின்றனர். பணி நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் வசித்தாலும், ஊரில் திருவிழா என்றால் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள்.

ஆலயங்கள்:
இலுப்பையூரில் மக்களின் வழிபாட்டிற்கு அமைந்துள்ள பொது ஆலயங்கள்:
அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம், அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயம், அருள்மிகு ஆலடி முத்து கருப்பண்ணசுவாமி ஆலயம், அருள்மிகு நாச்சியாரம்மன் ஆலயம், அருள்மிகு வல்லம் பிடாரியம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு அய்யனார் ஆலயம்.

இலுப்பையூரில் மக்களின் வழிபாட்டிற்கு அமைந்துள்ள குலதெய்வ ஆலயங்கள்:
சாத்துடையான் கோத்திரத்தினரின் குலதெய்வமாகிய அருள்மிகு தொட்டிச்சியம்மன் ஆலயம், மருதுடையான் கோத்திரத்தினரின் குலதெய்வமாகிய அருள்மிகு ஆப்புர் நல்லேந்திரசுவாமி ஆலயம், சாத்துடையான் கோத்திரத்தினரின் குலதெய்வமாகிய அருள்மிகு மூக்கரை சாத்தனார் சாத்தாயி ஆலயம் மற்றும் மாத்துடையான் கோத்திரத்தினரின் குலதெய்வமாகிய அருள்மிகு பச்சையாயி அம்மன் ஆலயம் (வீட்டுக் கோவில்).

பொதுப்பண்டிகைகள்:

குடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) :
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் (மே மாதம்) ஐந்து நாட்கள் கோலகலமாகக் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழா குடியழைப்பு விழாவாகும். வழக்கமாய் சித்திரை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்கிழமை இரவு நிறைவு பெறும்.

பொங்கல் விளையாட்டுப் போட்டி:
ஒவ்வொரு வருடமும் தை மாதம் (ஜனவரி மாதம்) மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் மகிழ்சியுடன் கலந்துக் கொள்ளும் வகையில் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெறும்.

காமன் அல்லது காமான்டி விழா (ரதி மன்மதன் திருக்கல்யானம்) :
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் (பிப்ரவரி / மார்ச் மாதம்) அமவாசை முடிந்த மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் தொடங்கி பத்து முதல் பதினைந்து நாட்களுக்கு நடைபெறும் விழாவாகும்.

மற்ற விழாக்கள்:
ஆவணி மாதம் (ஆகஸ்டு மாதம்) விநாயகர் சதுர்த்தியும், புரட்டாசி மாதம் (செப்டம்பர் மாதம்) ஆயுத பூஜையும், கார்த்திகை மாதம் (நவம்பர் / டிசம்பர் மாதம்) திருக்கார்த்திகை தீபமும் வருடாவருடம் கொண்டாடப்படும் மற்ற முக்கிய விழாக்களாகும்.